சினிமா போலீசும், நிஜ போலீசும் !

     எப்போதெல்லாம் காவல்துறையை மையப்படுத்தி முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம், அந்த திரைப்படங்கள் காவல்துறையின் இமேஜை உயர்த்த உதவும் என்று சொல்லப்படுகிறது.
   அண்மையில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சிங்கம் II படத்தில் காவல்துறை குறித்த பிம்பம் பலருக்கும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
படத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் திருப்பங்கள்.
     கதாநாயகன், வேகத்தோடு, வெறியோடு, காதலோடு, சென்னையிலும், நெல்லையிலும் திடீர் திடீரென தோன்றி அசரவைப்பது - எந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்படாமல், நேரடியாக உள்துறை அமைச்சர் கட்டுபாட்டில் செயல்படுவது - நினைத்த அடுத்த நிமிடத்தில், வெளிநாடுகளில் சண்டை போடுவது - இப்படி நடைமுறையில் எந்த விதத்திலும் ஒவ்வாத முறையில் காவல்துறையை சித்தரிப்பது எப்படி காவல்துறையின் இமேஜ் உயர உதவியது என்பது சந்தேகம் தான்.
   சினிமா படங்களில் மட்டும் ஹீரோக்களாக சித்தரிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் நிஜத்தில் அப்படி யாரும் இல்லை. முக்கிய குற்றவாளியை பிடிக்க தமிழக எல்லையைத் தாண்டி பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், பயணத்திற்கு அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், கண்காணிப்பாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள் பெரும்பாலும் ரயிலில்தான் பயணிக்க வேண்டும். உதாரணத்திற்கு டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 3 நாட்கள் ரயில் பயணத்திலேயே கழிந்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர்.
   வெளிநாடு செல்வது, குற்ற வழக்கின் தேவையை பொருத்தது என்றாலும், அது சினிமாவில் காட்டப்படுவது போல் கண்டிப்பாக இல்லை. காவல்துறையின் இமேஜ் உயரவேண்டும் என்றால், திரையில் தோன்றும் போலீஸ் நாயகன், எந்த கணக்கும் இல்லாமல், துப்பாக்கியில் சுட்டு விளையாடலாம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனென்றால், நிஜத்தில் மக்கள் நலன்சார்ந்து இயங்கிய, இயங்கிவரும் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே உண்மையான ஹீரோக்களாக இருக்கிறார்கள்.
   துப்பாக்கியை மட்டும் நம்பி காக்கிச்சட்டை அணியும் வெகு சில அதிகாரிகள், அவர்களின் என்கவுன்ட்டர்களால் பிரபலமாக இருக்கிறார்கள்.ஆனால், இவர்களால் ஒரு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை பதட்டமான சூழ்நிலையை சரியாக கையாளும் அதிகாரிகளால் மட்டுமே கலவரத்தை, மோதலை தவிர்க்க இயலுமே தவிர, துப்பாக்கியைக் கொண்டு சுடுபவரால் அல்ல.
   அதேபோல், காவல்நிலைய மட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.  கொடுக்கப்படும் பெரும்பாலான புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் புகார்தாரர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. காவல்துறையின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது காவல்துறையினரின் பணிப்பளுவும் அதிகரித்துவருகிறது.இந்த சூழ்நிலை தொடர்ந்தால் காவல்துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
   நவீனமயமாக்கல், அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதும் ஆகியவை காவல்துறையை மேம்படுத்த உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கையாக இருக்கின்றன.
  கடந்த 2006 ஆம் ஆண்டில், நவீனமயமாக்கல் செய்யவும், ஆளும் கட்சியினர் பிடியிலிருந்து காவல் துறையை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால், இதை எந்த அரசுகளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டிருக்கிறது.
ஆக,காவல்துறையினரின் இமேஜை உயர்த்த வெறும் திரைப்படங்கள் மட்டும் உதவுமா என்ன?
மகாலிங்கம் பொன்னுசாமி
- பசுமைநாயகன்